Friday 19 August 2016

remove singala army from north east

நாட்டில் இன்று யுத்தம் இல்லை நாடு இன்று அமைதியாகவுள்ளது, அதனால்  தமிழ், சிங்கள மக்களுக்கு இடையிலான புரிந்துணர்வை கட்டி எழுப்புவதே இன்றய பிரதான பணி இதற்காக தாம் அர்ப்பணிப்புடன்  செயற்படப்போவதாக வும், வடக்கில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் அனைத்தும்
விடுவிக்கப்படும்  என்ற வாக்குறுதியையும்  இன்றைய ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேன ஆட்சிப்பீடம் ஏறிய ஆரம்பகாலத்தில் வழங்கியிருந்தார்.ஆனால்  அது தொடர்பாக எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் இன்னமும் எடுக்கப்படவில்லை மாறாக கடந்த கால அரசுகள் தமிழ் மக்களையும்  அவர்களின் உரிமைகளையும் அழிக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுத்ததோ அது இன்னமும் தொடர்ந்து நடக்கிறது.

தமிழ் மக்கள்  வாழும் வடக்கு கிழக்கு பகுதியிலேயே  அதிகளவிலான  சிங்கள ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில்  மூன்று பொதுமக்களுக்கு ஒரு இராணுவம் (3people :1army)  எனும் விகிதத்தில் ராணுவம் நிலைகொண்டுள்ளதாக வடக்கு முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன் தனதுரையில் குறிப்பிட்டிருந்தார். விடுதலை  புலிகளுடனான ( தமிழ் மக்களுக்கு எதிரான) போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்த பின்னும் போர்  நடைபெற்ற காலத்தை போலவே ராணுவ நடமாட்டம் காணப்படுவது பொதுமக்கள் தமது அன்றாட கடமைகளை பய  உணர்வுடனேயே செய்யவேண்டிய துரதிஷ்ட நிலையில் காணப்படுகிறார்கள். இலங்கை ஒரு ஜனநாயக நாடு மட்டுமன்றி வடக்கு கிழக்கு பிரதேசத்தில் அனைத்து அரச திணைக்களங்களும் இயங்குகின்றன  ஆனால் அனைத்து துறைகளிலும் ராணுவத்தின் தலையீடு காணப்படுவது பெரும் துரதிஸ்ட்டமே.

ஆரம்ப பாடசாலையில் இருந்து நீதித்துறை வரை ராணும்  ஆதிக்கம்  செலுத்துவதை நாளாந்த நிகழ்வுகள் மூலம் வடகிழக்கில் வாழும் தமிழர் அனுபவித்து வருவதை செய்திகள் மூலம் உணர முடிகிறது. போரின் விளைவால் இன்று ஆண் தலைமைத்துவம் அற்ற குடும்பங்கள் இருபது வீதம் வரை காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன  இவ்வாறானவரின் இன்றய நிலை சிங்கள ராணுவத்தின் பிரசன்னத்தினால் பெரும் கேள்விக்குறியாகவுள்ளது. இரவு நேரத்தில் இராணுவத்தின் அத்துமீறல் காரணமாக பெண்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள் அதுமட்டுமன்றி சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு பக்கபலமாக இராணுவமே செயற்படுகிறது.

தமிழ் மக்களை சிந்திக்கவிடாது தமது கட்டுக்குள் வைத்திருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டுமோ அத்தனை  நடவடிக்கைகளையும் கடந்த கால அரசுகளைப்போலவே இந்த  அரசும் இராணுவத்தினூடு வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது.  இலட்ஷக்கணக்கான இராணுவம் நிலைகொண்டுள்ளபோதும்  தமிழர் வாழும் பகுதிகளில் போதைப்பொருள் எதுவித தடையும் இன்றி தாராளமாக கிடைக்கிறது. இன்னொரு பக்கம் விபச்சாரம் சமூகத்தை சீரழிக்கிறது, இவற்றுடன் குழு மோதல்கள், வாள்வெட்டு. இவ்வாறான சமூகவிரோத செயல்கள் தலைவிரித்தாடும்போது  எவ்வாறு ஒரு சமூகம் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கப்போகிறது?

 தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள், பௌத்த விகாரைகள் அமைத்தல் என்பது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 2009 ஆண்டு போர் முடிவுக்கு வந்தபின்னர் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் அரச திணைக்களங்களின் அலுவலக பணியாளரில் இருந்து அதிகாரிகள் வரை சிங்களவர்கள் நியமனம் அதிகரித்து காணப்படுவதுடன் யாழ் பல்கலைக்கழகத்துக்கு சிங்கள மாணவர்களின் அனுமதியும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது இவை அனைத்தும் சிங்கள இராணுவத்தின் பலத்துடனும் சிங்கள பேரினவாத அரசின்  அனுசரணையுடனும்  அரங்கேறி வருகின்றமை என்பதே உண்மை. இதர்க்கு  இன்றைய  நல்லாட்சி எனும் பெயரில் இயங்கும் மைத்ரி அரசு கடந்தகாலா சிங்கள அரசுகளுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளது.

இன்று யுத்தம் முடிவடைந்து ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் கடத்தபின்னும் சிங்கள இராணுவம் தமிழர் குடியிருப்பு பகுதிகளில் நிலைகொண்டிருக்க வேண்டிய அவசியம்  என்ன  உள்ளது? வடக்கு  கிழக்கை  போன்று ஏனைய ஏழு மாகாணங்களில் மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவம் முகாமிட்டுள்ளதா? இல்லையே மேலும் தமிழ் மக்கள் இரானுவத்தினால் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்று நன்கு தெரிந்தும் இராணுவத்தினரை வெளியேற்றாமல் தொடர்ந்து வைத்திருப்பது தமிழரை அழிப்பதற்கான ஒரு பொறிமுறையாகவே கருதமுடியும். தமிழர் பிரதிதிகள் தமது கதிரைகளை பாதுகாப்பதை நோக்காக கொண்டு தமிழரின் பிரச்சனைகளை கண்டும் காணாமல் இருப்பது பெரும் வேதனை கொடுப்பதாகவுள்ளது.