Monday 3 October 2016

அடுத்தவர் செய்தால் அது துரோகம், நாங்கள் செய்தால் அது தந்திரோபாயம்.

1948 இன்  பின்னர் இலங்கையின் அரசியலில்  எதுவித மாற்றமுமின்றி “இனவாதம்” என்ற மையப் புள்ளியைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கிறது. அதே கட்சிகள். அதே வாரிசுகள். அதே கோரிக்கைகள். அதே சுலோகங்கள். ஆனால்  கடந்த அரசாங்கங்களைப் போலவே தற்போதை அரசாங்கமும் செயற்படுகிறது. இன்னமும் யுத்த பாதிப்பு தொடருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள், போதைப் பொருள் பாவனை, கைதுகள், துன்புறுத்தல்கள், கொலைகள்  குறையவில்லை. நீதிமன்ற ஆணைகளையும் மீறி அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அதில் எமது  மக்கள் பிரதிநிதிகளோ தமது பதவிகளை தக்கவைத்துக்கொள்ள  மிகவும் புத்திசாலிகளாகவும் , துணிச்சல் படைத்தவர்களாகவும், விடாமுயற்சி உடையவர்களாகவும் விளங்குகின்றனர்.

வட கிழக்கு ஒரே பிரதேசம் என்கிறார்கள். மொழி மக்களை இணைக்கும் என்கிறார்கள். ஆனால் இரணைமடுவில் இருந்து  நீரை யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு இவர்களே தடையாக உள்ளனர். கிழக்கில் சம்பூர் அனல் மின்சார திட்டத்தை ஆதரித்து அவ்வூர் மக்களின் வாழ்வாதாரத்தை இவர்களே மறுத்தார்கள்.
காலங்காலமாக நாட்டின் குடிமக்களை பிளவுபடுத்தும் அரசியலையே மேற்கொண்டு வருகிறார்கள். மக்களை உணர்ச்சி வசப்படுத்தி தமது இருக்கைகளை தக்க வைப்பதே  இவர்களின் இலக்கே ஒழிய மக்களை ஒற்றுமைப்படுத்துவதல்ல. காரணம் மக்கள் ஒன்றுபட்டால் தங்கள் பிழைப்பு கெட்டுவிடும் என்பதே ஆகும்.

நல்லாட்சி அரசை நிறுவுவதற்கு தமிழ் மக்களின் வாக்குகளும் பெரும் பங்கு வகித்ததென கூறும் இவர்கள் ஏன் இன்னும் அரசியல் தீர்வைப் பெற்றுகொள்வதற்கான  நடவடிக்கையில் உரிய முறையில் இறங்கவில்லை?  இவர்கள் செய்ய வேண்டியது தீர்மானங்களோ, அறிக்கைகளோ, வாய் பேச்சுக்களோ, உணர்ச்சிகளைக் சீண்டிவிடும் ஊர்வலங்களோ அல்ல. அத்தகைய ஆக்கபூர்வமான உரையாடலை உரியவர்களுடன்   இலகுவாக நடாத்துவதற்கு  இன்றைய பாராளுமன்ற எதிர்க் கட்சித் தலைவருக்கு சகல தகுதியும் அதிகாரமும் உண்டு. நாட்டின் அனைத்துக் குடிமக்களின் நலன்களையும் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பும் அவருக்கு உண்டு. இன்றைய அரசியல் சூழலையும், நல்லாட்சி அரசாங்கத்தின் வளங்களையும் தாராளமாகப் பயன்படுத்தி அவரால் தென்னிலங்கை மக்களின் இதயங்களை வென்றெடுக்க முடியும்.
ஆனால் இவர்கள் எமக்காக பேசவும் மாட்டார்கள். அவர்களுடனான உரையாடலை நடாத்தவும் மாட்டார்கள். இவ்வாறன பேச்சில் இறங்கி சிலசமயம்  நாட்டில் சமாதானம்  வந்துவிட்டால் . இவர்களது  பிழைப்பு என்னவாகும்? அன்று இணக்க அரசியலை கையாண்டவர்களை துரோகி என்று கூறியவர்கள் இன்று மட்டுமல்ல முன்னரும் பல தடவைகள் சிங்களப் பேரினவாத அரசாங்கங்களுடன் இணங்கிப் போன வரலாறு உண்டு. துரோகிகள் எனப் பிரகடனம் செய்து தண்டனை வழங்கியவர்கள் கூட அதே பேரினவாத அரசுடன் இணங்கிப் போனதும் இலங்கையின் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.
இது “அடுத்தவர் செய்தால் அது துரோகம், நாங்கள் செய்தால் அது தந்திரோபாயம். ” என்பது இதைத்தான்.