Sunday 27 November 2016

தமிழரின் நீதியான கோரிக்கைகள் எப்போது கிடைக்கும்?

இலங்கையில் உள்நாட்டு போர் பல வருடங்களாக நிகழ்ந்த நிலையில் 2000ம்
ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியது.ஆனால் குறித்த சமாதான பேச்சானது 2006ம் ஆண்டளவில் மெல்ல மெல்ல முறிவடைந்தது. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் 2006ம் ஆண்டு தனது மாவீரர் தின உரையில் தமிழ் மக்களின் அடிப்படைப்பிரச்சினைகள் தொடர்பாக சில முக்கிய கேள்விகளை கேட்டிருந்தார் .அதற்க்கான ஆக்க பூர்வமான எந்த பதிலும் பத்து ஆண்டுகள் கடந்தும் வழங்கப்படவில்லை.மைத்திரி அரசும் பதவியேற்று இரண்டு ஆண்டுகளை எட்டவுள்ளது.


''போருக்கு ஓய்வு கொடுத்து, சமாதான வழியிற் சமரசப் பேச்சுக்கள்வாயிலாக எமது மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் முயற்சித்து ஆறு ஆண்டுகள் அசைந்தோடி விட்டன.
நாம்அமைதி காத்த இந்த ஆறு ஆண்டு காலத்தில் இந்த நீண்ட கால விரிப்பில் தணியாதநெருப்பாக எரிந்து கொண்டிருக்கும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதா? தமிழரைச் சதா கொடுமைப்படுத்திக் கொன்றொழித்து வரும் சிங்கள ஆட்சியாளர்களின் மனவுலகில் மாற்றம் நிகழ்ந்ததா? தமிழரின் நீதியான நியாயமான கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்பட்டனவா?
ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனங்களால் நாள்தோறும் அவலத்திற்கும், இம்சைக்கும் ஆளாகி நிற்கும் எம்மக்களுக்கு நிம்மதி கிடைத்ததா? எம்மக்களை நாளாந்தம் அழுத்தி வரும் அன்றாட அவசியப் பிரச்சினைகள் தானும் தீர்த்து வைக்கப்பட்டனவா? எதுவுமே நடக்கவில்லை மாறாக  எத்தனையோ கனவுகளோடு ,  எத்தனையோ கற்பனைகளோடு நீதி கிடைக்கும் என காத்திருந்த தமிழருக்கு சாவும் அழிவுமே பரிசாக கிடைத்திருக்கின்றன     சோதனைமேல் சோதனையாக, வேதனைமேல் வேதனையாகத் தாங்க முடியாத துயரச்சுமை தமிழர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த வேதனையால் அழுதழுது கண்ணீர் தீர்ந்து, இரத்தமே கண்ணீராக வருகின்ற சோகம் தமிழினத்திற்கு ஏற்பட்டிருக்கிறது''.

குறித்த கேள்விகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் தனது மாவீரர்தின உரையில் குறிப்பிட்டிருந்தார். அதாவது அரசானது நேர்மையாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனையைகூட  தீர்த்துக்கொள்ள முன்வரவில்லையெனில், எப்படி இந்த அரசு நியாயமான அரசியல் தீர்வினை முன்வைக்கும்? என்பதேயாகும்.அதற்கான பதிலை  இலங்கையின் இனவெறி பிடித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவரின் சகோதரர்களும் சர்வதேசத்தின் ஆதரவுடன் நடத்திய கொடூர யுத்தத்தின் மூலம் பல்லாயிரம் மக்களை கொண்று குவித்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் கூற்றை உறுதி செய்திருந்தனர்.


இன்று நாட்டின்  ஜனாதிபதி மாறியுள்ளார் என்று மட்டும் சொல்லலாம்
ஆனால் நம் தமிழ் இனத்திற்கு எந்த முன்னேற்றமும் ஏற்படபோவதில்லை என்பது  உறுதி, ஏனெனில் இன்றைய ஜனாதிபதி மைத்திரி தான் தமிழ் மக்கள் அதிகமாக படுகொலை செய்யப்பட்ட காலத்தில் மஹிந்த ராஜபக்சவின் அரசின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். அதேபோல இன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சு வார்த்தை என்ற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்தியவர். இவர்களால்  தமிழ் இனத்திற்கு விடிவு கிடைக்குமா???